செவ்வாய், 26 மே, 2009

புலம்பெயர்வாழ் தமிழர் வழியில் இந்திய மனசாட்சியை உலுக்குவோம்.

அன்பார்ந்த தமிழ் மக்களே,
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டம் தற்போது முற்றிலும் புதியதொரு நிலையை எட்டியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டப்போராட்டமாகத் தொடங்கி, அமைதி வழியிலான கோரிக்கைப் போராட்டமாக வளர்ந்து, சிங்கள அடக்குமுறையால் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய சூழலில் வேறு வழியின்றி ஆயுதப்போராட்டத்திற்குத் தள்ளின சிங்கள அரசுகள். இருப்பினும், தமிழர்களின் இடையறாத போராட்டம் ஒரு அங்கீகரிக்கப்படாத தமிழீழ அரசை இலங்கையில் நிறுவி செயல்பட்டுவந்த நிலையில், இந்தியாவில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, அதன் தலைமை, அந்த அரசில் அங்கம் வகித்த தமிழின விரோத சக்திகள், இந்திய நலன் குறித்த பார்வையற்ற அயலுறவுக்கொள்கையைக் கொண்டதன் வாயிலாக சிங்கள பேரினவாத அரசிற்கு பல்வேறு வகையிலும் உதவியது.

அது, இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைப் பலிகொண்ட ஒரு கொடூரமாக அரங்கேறியுள்ளது. இந்திய அரசின் தவறான-தனக்குத்தானே தீங்கிழைத்துக்கொள்கின்ற வெளியுறவுக்கொள்கை சிங்கள அரசிற்குத் துணையாகப் போனதன் விளைவாக இன்று ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்றழித்தும், ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களை நிரந்தர ஊனமாக்கியும், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை தங்கள் இருப்பிடங்களை விட்டுத் துரத்தி நலன்புரி கிராமங்கள் என்கிற வதை முகாம்களில் சேர்த்துள்ளது.

இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், என பலதரப்பில் வகைப்படுத்தி அவர்களைத் தனித்தனியே பிரித்து இவ்வகை வதை முகாம்களில் அவர்கள் அழித்தொழிக்ப்படுகின்றனர். நாகரீக சமூகம் ஒத்துக்கொள்ளாத, மனிதன் தவிர்த்த உயிரினங்களுக்கும் யாரும் செய்திட அஞ்சுகிற கொடுமைகளும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவது, இளைஞர்கள் செயற்கையாக ஊனமாக்கப்படுவது, அடுத்த இளைஞர் தலைமுறை உருவாகக்கூடாது என்கிற நோக்கில் சிறுவர்கள் கொல்லப்படுவது, போரில் குண்டடிபட்ட மக்களுக்கு மருத்துவ வசதியின்றி அவர்கள் நோயோடும், பசியோடும் கொல்லப்படும் கொடூரம் ஆகிய அனைத்தும் அங்கே அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. இதுவரை போரில் ஈடுபட்டுவந்த சிங்கள இனவெறிப்படை, இனி யோசித்து யோசித்து இம்முகாம்களில் உள்ளோரை கொன்றழிக்கும் கொடூரம் தொடரும் அபாயம் உள்ளது.

முகாம்களில் ஒருவேளை உணவு. அதுவும் பலநாட்களுக்கு ஒருமுறை. உயிர்வாழ உணவை எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏங்கும் இரக்கமற்ற, மனிதத்தன்மையற்ற சூழல். அத்தனையும் நடக்கின்றது.

மனித உரிமையென்றும், ஜனநாயகம் என்றும் வாய்கிழியப் பேசும் சர்வதேச சமூகம், அவர்கள் போரில் கொல்லப்பட்டபோது பார்த்துக்கொண்டே இருந்தன. வெற்று ஆரவார, பயனற்ற அறிக்கைகள் வாயிலாக, சிங்களத்தின் அத்தனை கொடூரங்களுக்கும் இவர்களே சாட்சிகளாக இருந்தனர். இன்று, ஈழத் தமிழர் வாழ்க்கை கொடூரத்தின் உச்சத்தில் போய் நிற்கிறது. இதுவரை போராளிகள் இருந்தார்கள் அவர்கள் போராடினார்கள் என்ற நிலையும் இல்லை. பயங்கரவாதத்தை வேரறுத்துவிட்டதாகவும், முகாம்களில் உள்ளோருக்கு நல்வாழ்வு அளிக்கப்போவதாகவும் சிங்களம் சொல்லுகின்றது. அதற்காக சர்வதேசத்திடம் உதவிகள் கேட்கின்றது. கொடுக்கப்படும் உதவிகள் நேரடியாகக்கொடுக்கப்படக்கூடாது என நிபந்தனை போடுகின்றது. அத்தனையையும் ஏற்று, இன்னமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ற பெயரில் இந்தியா சிங்களத்திற்கு உதவி வருகின்றது.

போருக்குப்பின்னர், மேற்குலகில், ஈழத்தமிழர்கள் நடத்திவரும் தொடர்ந்த போராட்டங்களால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மனிதகுல வராலாற்றில் ரத்தக்கறைபடிந்த இப் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கத் தலைப்பட்டுள்ளன. ஆனால், இப்போதும் இந்தியா சிங்களப் பேரினவாத அரசிற்கு முட்டுக்கொடுக்கும் பணியைச் சிரமேற்கொண்டுள்ளது.

போர் நடக்கும்போது, இந்தப் போரை இந்தியா இல்லாமல் நம்மால் நடத்தியிருக்க முடியாது. இந்தியாவே அனைத்து உதவிகளும் வழங்கியது. அவர்கள் சிங்களத்தின் நல்ல நண்பர்கள் என்று பலவகையிலும், பேசிவந்த இலங்கை, போர் முடிந்ததாக அறிவித்த சில நாட்களிலேயே தாங்கள் வென்றது சீனா அளித்த ஆயுத உதவியால்தான். இந்தியா ஆயுதம் வழங்கவில்லை என்று மாற்றிப்பேசுகின்றது.

ஓங்கிக்குரல் கொடுத்தால் எட்டும் தூரத்தில் நமது சொந்தங்கள் போர்சூழலில் பாதிக்கப்ட்டபோது தமிழகம் விழித்தெழுந்தது. ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனிதச் சங்கிலிகள், உண்ணாவிரதங்கள், சட்டப்பேரவைத் தீர்மானங்கள், தீக்குளிப்புகள் என்று நாம் அனைத்து வகைப் போராட்டங்களை நடத்தியும், சர்வதேசமும் மனசாட்சிக்குப் பயந்து போரை நிறுத்து என்று கூறியபோதும், இந்தியா போரை நிறுத்து என்று ஒற்றைவார்த்தையைச் சொல்லவில்லை. காரணம் போரை நடத்தியது இவர்களே. யாரிடம் போய்ச் சொல்லுவார்கள் போரை நிறுத்து என்று.

தமிழகத்தில் கடந்த 6 மாத காலமாக பலதரப்பினராலும் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டகளால் குறித்த பயன் இல்லாமல் போயுள்ளது. பெரும் மக்கள் திரளினரை ஒன்றிணைத்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அதில் அடங்கியுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் வரம்பிற்கு மீறி இனி ஏதும் செய்திட இயலா நிலையே உள்ளது.

இந்திய உதவியுடன் நடத்தப்பட்ட கொடூரம் போராளிக்குழுக்களை முடக்கிய ஒரு நிலைக்குத் தற்போது வந்துள்ளது. இது யாரும் எதிர்பாராததுதான். போர் முடிந்ததாக அவர்கள் அறிவித்துவிட்டார்கள். இனி......?

ஈழத் தமிழர்களின் கடந்த 40 ஆண்டுகால உரிமைப்போரின் தற்போதைய நிலையில், அவர்களது சக்திகள் அனைத்தும் அழிக்கப்பட்டு அவர்கள் சொந்த நாட்டிலேயே அனாதையாகிவிட்ட நிலையில், நாம் என்ன செய்யப் போகின்றோம்?

ஈழத் தமிழர்களின் துயர்துடைக்க இனிதான் நாம் அதிகம் வேலைசெய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக இரண்டு மடங்கிற்கும் மேலாக நாம் பணியாற்ற வேண்டியுள்ளது. உருகிமறுக இது நேரமில்லை. ஓய்ந்துபோக இது நேரமில்லை. போராட்டங்கள் இனி பயனில்லை. ஒரே வழிதான் நமக்குள்ளது. இன்னனும் கூர்மையாக உலகின் மனசாட்சியை விழித்தெழச் செய்வது. உயர்ந்த விழுமியங்கள், பண்பாடுகள், நாகரீகம், கொள்கைகளோடு வாழ்ந்த தமிழினம், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழினம் வரைமுறையின்றி அழியத்தான் வேண்டுமா என்று இந்திய மனசாட்சியை உலுக்கச் செய்வது. தவறான அயலுறவுக்கொள்கையால் ஈழத் தமிழினம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஏற்படவுள்ள பாதிப்புகளை இந்திய மக்களை உணரச் செய்ய வேண்டியுள்ளது.

புலம்பெயர்வாழ் தமிழர்களின் இத்தகைய இடையறாத போராட்டம்தான் இன்றைக்கு மேற்குலகை இரங்கவைத்துள்ளது. அத்தகைய கருத்துருவாக்கம்தான் இன்றைக்கு நாம்செய்யவேண்டிய பணி. குறிப்பாக, இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களை நாம் வினவுவது ஈழத்தமிழரின் வாழ்வுரிமைப் போராட்டம் நியாயமானதா இல்லையா? என்பதே.

இந்தியாவின் நலன்களுக்காகவும், வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமிழகத்தின் செலுத்திவரும் பங்களிப்பு அளப்பரியது. பிஜித் தீவில் இந்தியன் தாக்கப்பட்டால் தமிழன் துடிக்கின்றான். குஜராத்தில் பூகம்பம் என்றால் நிதிதிரட்டிக்கொடுக்கின்றான். துயர்துடைக்க ஓடுகின்றான். பாகிஸ்தானோடு போர்என்றால் கோடிகோடியாகக் கொட்டிக்கொடுக்கினறான். ஒவ்வோராண்டும் முன்னாள் படைவீரர் நலநிதிக்காக யாரைவிடவும் அள்ளிஅள்ளிக் கொடுக்கின்றான். இவ்வளவு செய்தும் அவனுக்கு-அவன் இனத்திற்கு அதே இந்தியா துரோகம் இழைக்க முடியுமென்றால் அதை கேள்விகேட்போம். இன்றைய சூழலில் ஈழத்தமிழர் நிவாரணம் பெற இந்தியா உதவிசெய்திட அழத்தம்கொடுக்க வைப்போம். ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டம் சரியா, தவறா எனச் சொல்லச்சொல்லுவோம்.

அதற்கான செயல்திட்டங்களோடு நாம் களமிறங்கவேண்டியுள்ளது. இவ்வளவு போராட்டங்கள் தமிழகத்தில் நடந்தபின்னும், காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி வெற்றி பெறுகிறதென்றால் அதற்குக்காரணம், பணம் மட்டுமல்ல. நமது மக்களின் விவரக் குறைவுதான். ஈழத் தமிழர்கள் இந்தியாவிலிருந்து போனவர்கள் என்று தவறாகக் கற்பிக்கப்பட்டுள்ளார்கள் இவர்கள். இதே கருத்தைத்தான் இந்தியாவில் ஆளும் வர்கங்கள் மற்றைய மாநிலங்களிலும் உருவாக்கி வைத்துள்ளது. இண்டு ராம்களின் இத்தகைய பொய்ப்பிரச்சாரங்களை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது. மற்றைய மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஜனநாயகப் போராளிகள், ஊடகநெறியாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரிடமும் நாம் அணுக வேண்டியுள்ளது. நியாயம் கேட்கவேண்டியுள்ளது.

இம்முயற்சியே இந்தியாவின் தவறான அயலுறவுக் கொள்கையை மாற்றும். தமிழீழத்தை அங்கீகரிப்பது மட்டுமல்ல இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்கும். அதற்காக, இந்தியாவின் மனசாட்சியை உலுக்குவோம். விழித்தெழச் செய்வோம்.

வாருங்கள் தோழர்களே இந்திய மனசாட்சியை விழித்தெழச் செய்வோம்.
மனசாட்சி உள்ளோரை அணிதிரட்டுவோம்.